"திமுகவை காப்பாற்றியவர் கருணாநிதி" - புகழாரம் சூட்டிய வைரமுத்து !
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் குறளோவியம் தந்த தமிழோவியம் என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிஞர் நெல்லை ஜெயந்தா தொகுத்து வழங்கிய மாபெரும் புகழரங்கத்தை டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் வைரமுத்து , ஜெகத்ரட்சகன், இந்து.என்.ராம், இஸ்ரோ விஞ்ஞானி தேன்மொழி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் கருணாநிதியின் பெருமைகளை விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பேசிய கவிஞர் வைரமுத்து நெருக்கடி நிலைக்கு எதிராக திமுகவை காப்பாற்றியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு பூ மலர்வது தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப காற்று கைவீசித் திரிவது தன் இருப்பை இனங்காட்டவல்ல; நாசிகளுக்கெல்லாம் சுவாசம் பரிமாற மழைத்துளி தரையிறங்குவது இடிகளின் துரத்தலுக்கு அஞ்சியல்ல; பசித்த வேர்களின் திரவ உணவுக்காக பூவாய் காற்றாய் மழையாய் இனம் மொழி மீது இயங்கிய தலைவா உன் நூற்றாண்டை எடுத்துப் பல நூற்றாண்டுகள் உடுத்துக் கொள்ளும்” என கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.