நிலமற்ற தொழிலாளிகளின் பெயரில் லட்சக்கணக்கில் பயிர்க்கடன்

மயிலாடுதுறை அருகே நிலமற்ற கூலித்தொழிலாளிகளின் பெயரில் லட்சக்கணக்கில் பயிர்க்கடன் வாங்கியிருப்பதாக பாரத ஸ்டேட் வாங்கி அனுப்பிய கடிதத்தால் தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-23 04:41 GMT

மனு அளிக்க வந்த தொழிலாளர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள், சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். தினந்தோறும் வேலைக்குச் சென்றால்தான் உணவு இல்லை என்றால் பட்டினிதான். இவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி நோட்டீஸ் ஒன்று மயிலாடுதுறை எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் பயிர் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக ரூ.1,86,831.56 உள்ளது என்றும், ஜூன் 13-ஆம் தேதியிலிருந்து பின்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வங்கிக்குச் சென்று கேட்டால் பயிர்க்கடன் வாங்கிக் கொடுத்த ஏஜன்ட் இதுபோல் செய்துள்ளார், நீங்கள் பணத்தை கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான பெருமாள் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, விவசாய நிலமோ ஆவணங்களோ இல்லாத தங்களுக்கு பயிர் கடன் கொடுத்த வங்கி மீதும், ஏமாற்றிய மோசடி நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு கடன் இல்லை என்று அறிவிப்பு செய்யவேண்டும் என்று புகார் அளித்தனர். காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை, வங்கி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, மாவட்ட நிர்வாகம் இதகுறித்து நடவடிக்கை எடுத்து ஏழை விவசாயிகளை காப்பாற்றவேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இவர்களைப்போல் அப்பகுதியில் 10 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், பயிர்கடன் வாங்கிதரும் ஏஜன்ட்டிற்கும் வங்கிக்கும் தொடர்பு இருப்பதாகவும் 1500 நபர்களுக்கு பயிர்கடன் வாங்கிக் கொடுத்து கமிஷன் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News