தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Update: 2024-05-30 09:35 GMT

இ.பி.எஸ் 

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள்களில் வெளி வந்த கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற செய்திகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவல்துறையினருக்கு இனியாவது முழு சுதந்திரம் கொடுத்து, சமூக விரோதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும், இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையும் நிலவுகிறது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரே இரவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுகிறது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மது போதையில் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர்களுக்கிடையே வெட்டுக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அம்பத்தூரில் நடைபெற்ற போதை மாத்திரை விற்பனை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதி' களை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' என தெரிவித்துள்ள்ளார்.

Tags:    

Similar News