அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை - வெங்கடேசன்

மதுரை அதிமுக வேட்பாளர் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-03 19:24 GMT

சு.வெங்கடேசன் எம்பி  

மதுரைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் "வெங்கடேசன் எம். பி நிதிக்கான 17 கோடியில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். மதுரை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப் பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம்.

ஆனால் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு இராசாசி மருத்துவமனை பெருந் தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள். இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என பல பணிகளை செய்துள்ளோம்.

உண்மை இப்படி இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்துள்ளோம். மீதப்பணத்தை செலவழிக்க வில்லை எனக் கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் இல்லை. ஆனால் தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று தெரிவித்துக் கொள்கிறேன் என  சு.வெங்கடேசன் எம்.பி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News