மதுவிற்றவர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவன் (22) என்பவரை கடந்த 27.04.2024 அன்று மத்தியபாகம் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கடந்த 25.04.2024 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (28) என்பவரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 2பேர் மீதும் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.