ஆளுநர் மாளிகை தாக்குதல் திசை திருப்பப்படுகிறது: எல்.முருகன்
ஆளுநர் மாளிகை தாக்குதல் திசை திருப்பப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Website
Update: 2023-10-27 08:46 GMT
மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி வந்தார். அவர் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆளுநர் மாளிகை தாக்குதல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும். தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்த தாக்குதல் சம்பவம் காட்டுகிறது. தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடத்திய நபரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் தி.மு.க. பிரமுகர் என்பதை மறைத்து சட்டத் துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் விஷயத்தை திசை திருப்புகிறார். இது ஒரு தனிநபர் செய்யக் கூடிய காரியம் அல்ல. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை விசாரணை செய்ய வேண்டும். இதனை என்.ஐ.ஏ. அல்லது சி.பி.ஐ. போன்ற அமைப்புகளால் தான் விசாரணை செய்ய முடியும். நேற்றும் கோவையில் பாலஸ்தீனிய கொடியை பறக்க விட்டுள்ளனர். இவையெல்லாம் எவ்வளவு பெரிய தேசத்துரோக செயல்கள், இவற்றையெல்லாம் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.