அடுத்த ஒரு விக்கெட்டை கன்ஃபார்ம் செய்த திமுக..!
”எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்" - கமஹாசன்
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இணைத்துள்ள திமுக, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தேர்தலில், காங்கிரஸ் 6 மக்களவை தொகுதியையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்கீடு செய்யுமாறு திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.
ஏற்கெனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மாக்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்று அறிவாலயத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைத்து சென்றார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசனின் சந்திப்பு நடைபெற்றது.
அதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சேர்ந்துள்ளதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் வேறெந்த தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்து ஏன் என தெரிவித்துள்ளார். அதில், ”இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டிருந்தாலும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.