பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டு உள்ளதா?: அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டு உள்ளதா என அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;
மதுரை
தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 2021-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது. இருப்பனும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்குவதில்லை. ஆகவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.