மதுரை மல்லி ரூ.800க்கு விற்பனை - விலை சரிவு
மதுரை மல்லிகை
தீபாவளியை முன்னிட்டு கிலோ ரூ.1200க்கு விற்பனையான மதுரை மல்லிகை, தற்போது பண்டிகை முடிவடைந்த நிலையில், கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற பூக்களும் சற்று விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல் வணிக வளாகத்தின் உள்ளே பூக்கள் விற்பனைக் கடைகள் அமைந்துள்ளன. இங்கு வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு, திருமங்கலம், சிலைமான், பூவந்தி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, இப்பகுதியில் விளைவிக்கப்படும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. அதன் தரம், மணம் ஆகியவற்றின் காரணமாக மதுரை மல்லிகைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இதன் அடிப்படையில் மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கிச் சிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1200 வரை விற்பனையான மதுரை மல்லிகை, இன்று கிலோ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சி ரூ.400, முல்லை ரூ.400, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, செண்டு மல்லி ரூ.70, நாட்டு சம்பங்கி ரூ.200, ஹைபிரிட் சம்பங்கி ரூ.80 என விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.