வரத்து குறைவால் மதுரை மல்லிகை ரூ.2000க்கு விற்பனை
பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளதால் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த நேரத்தில் மல்லிகை சீசன் துவக்கிய நிலையில் இந்த ஆண்டு இன்னும் துவங்காமல் உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, மேலூர், கெட்டாம்பட்டி, வலையங்குளம், கப்பலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பும் உண்டு. அதன் நறுமணம் மற்றும் தரம் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து உள்ள காரணத்தால், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரையிலிருந்து மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகையின் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது.
இதனால் பூக்கள் வரத்தும் குறைந்துள்ள காரணத்தால், தொடர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய விலை நிலவரத்தைப் பொறுத்தவரை மதுரை மல்லிகை ரூ.2,000, பிச்சி ரூ.1,200, முல்லை ரூ.1,200, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.150, கனகாம்பரம் ரூ.1,000 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'கடந்த ஆண்டு இதே நேரம் மல்லிகை சீசன் தொடங்கிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. காரணம் பனிப்பொழிவால் பூக்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது' என்றார்.