மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் திடீர் ராஜினாமா
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஜெ. குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். உடல்நலக் குறைவு காரணமாகவும், யாருடைய நிர்பந்தம் இன்றியும் தான், பதவி விலகுவதாக துணைவேந்தர் ஜெ.குமார், தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் துணைவேந்தர் பதவியில் இருந்து ஜெ.குமார் விலக்கிக்கொள்ளப்படுவார் எனக் கூறப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும் தங்களது சம்பளத்தை சரிவர வழங்கக் கோரியும், முன்னாள் பேராசிரியர்கள் ஓய்வூதியத்தை முறையாக வழங்கவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தச் சூழலில் தான் தனது உடல் நிலையை காரணம் காட்டி, துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார் ஜெ.குமார். பதவி காலம் முடிவடைய இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலையில் துணைவேந்தர் ஜெ. குமார் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.