ஊருக்குள் உலா வரும் மக்னா யானை - பொதுமக்கள் அச்சம்
தொரப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள மக்னா காட்டு யானை, இரவு முழுவதும் கிராமப் பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி, புறமான வயல், அள்ளுர் வயல், குனில் வயல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நெல், வாழை, பாக்கு போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொரப்பள்ளி ராஜா என அழைக்கப்படும் தந்தம் இல்லாத ஆண் மக்னா யானை ஒன்று உலா வந்தது.
இந்த யானையை வனத்துறையினர் நீண்ட காலம் போராடி அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் ராஜா மக்னா யானை தொரப்பள்ளி வந்தது. இந்த யானை கிராமங்களுக்குள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது இந்த யானை தொரப்பள்ளி பகுதியில் உள்ள கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பீரமாக உலா வருவதால் இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.