ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை: மன்னார் நீதிமன்றம்
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி 338 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியான நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிக்க வந்ததாக கூறி, ராமேசுவரத்தைச் சேர்ந்த ரிபாக்சன் (வயது 26), ராஜபிரபு சீனிபாண்டி (27), அரவிந்த் பாண்டி சீனிபாண்டி (24), ராபின்ஸ்டன் (41), பிரசாந்த் (56), ஆரோக்கியம் (58), யோபு (15), பெட்ரிக் நாதன் (37), ஜான் இம்மரசன் (38), அருள் பிரிட்சன் (29), நிஷாந்த் (25), பரலோக மேட்டன் வினித் (24), அந்தோணி லிஸ்பன் (24) ஆகிய 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசினர். தொடர்ந்து 14 மீனவர்களும் இலங்கையில் உள்ள மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கைது செய்ய மீனவர்கள் 14 பேரும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.