ஜனவரியில் பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்;
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தொமுச ஒன்றிய கவுன்சிலர் ஜோசப் நெல்சன், மாநில செயலாளர் கமலக்கண்ணன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியத்திற்கு சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும், அரசுத்துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணி மூப்பு அடிப்படையில் ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிடக் வேண்டும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்ற பெற்றது. அதனைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் மாயமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மாவட்ட தலைநகரில் பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணி நடத்துவது எனவும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்புக்கு முன் சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகை இடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார் .