மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை: மேயர் பிரியா
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
Mayor
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நடந்த தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னையில் வாழும் மக்கள் சனி, ஞாயிறுகளில் தங்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கக்கூடிய நல்ல இடமாக மெரினா கடற்கரையை இயற்கை நமக்கு அமைத்து கொடுத்து இருக்கிறது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. சென்னை மாநகராட்சி சார்பாக இங்கு தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் இங்கு வரும்போது குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனியாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற குப்பைகளை போட என்று தனியாக குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் (Blue Flag) பெற தமிழக அரசால் முன்னெடுப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ப்ளூ ஃபிளாக் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல தமிழக அரசால் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.