தெருவோர சண்டியர் போல் மோடி பேசுகிறார் - வைகோ
பிரதமர் நரேந்திர மோடி தெரு ஓரம் இருக்கின்ற சண்டியர் போல் பேசி கொண்டிருக்கிறார்.ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் தான் இந்த மக்களவைத் தேர்தல். மகாத்மா காந்தி இடுப்புத் துணியை மட்டுமே கட்டிக்கொண்டு கடைசி வரை வாழ்ந்தார்.பிரதமர் நரேந்திர மோடி 2,500 செட் ஆடைகளை வைத்துள்ளார். ஒரு நாளைக்கு 10 ஆடைகளை மாற்றுகிறார் என சிவகாசியில் நடந்த பிரசாரத்தின் போது வைகோ பேசினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்திராஜபுரத்தில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,மழை வெள்ளப் பாதிப்பின் போது தமிழகம் வராத, தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது என்ன என்று கேட்காத பிரதமர் மோடி,நேற்றோடு சேர்த்து 8 முறை தமிழகம் வந்துள்ளார். திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்கிறார் பிரதமர். நூறாண்டுகளை கடந்த திராவிட இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது. நான் 60 ஆண்டுகளாக திராவிட இயக்க கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தெரு ஓரம் இருக்கின்ற சண்டியர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.இண்டியா கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டும் என பிரதமர் துடிக்கிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சனாதன கூட்டத்தில் 32 பிரகடனத்தை வலியுறுத்தினர்.அதில் முதல் பிரகடனமாக இந்தியாவை இனி பாரத் என்று தான் அழைப்போம் என தெரிவித்தனர்.ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் தான் இந்த மக்களவைத் தேர்தல். மகாத்மா காந்தி இடுப்புத் துணியை மட்டுமே கட்டிக்கொண்டு கடைசி வரை வாழ்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2,500 செட் ஆடைகளை வைத்துள்ளார். ஒரு நாளைக்கு 10 ஆடைகளை மாற்றுகிறார். மகாத்மா காந்திக்கும் சேர்த்து தற்போது நரேந்திர மோடி ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறார். அந்த நரேந்திர மோடி தான் திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்கிறார். ஒரு இயக்கத்தை வாழ வைப்போம் என்று தமிழகம் வந்தால் அவர் மனிதாபிமானம் உடையவர். ஒரு இயக்கத்தை அழிப்போம் என்று வருபவர் மனிதாபிமானம் மற்றவர்.
இன்று ஆட்சியில் இருக்கக்கூடிய தமிழக முதல்வர் முதல்வர், விவசாய கடன் தள்ளுபடி,காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை கனடா நாட்டில் செயல்படுத்த தொடங்கி உள்ளனர். வெளிநாட்டுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்து தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தமிட்டவர் முதல்வர். இந்திய அளவில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 2வது மாநிலமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை ஜப்பான் போன்று தொழில் மையமாக மாற்ற முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.ஆனால் முதல்வரை பற்றி சிலர் அவதூறு பரப்புகிறார்கள். அவர்களின் பெயரை நான் இங்கு குறிப்பிட்டு அவர்களுக்கு விளம்பரம் தேடி தருவதற்கு நான் தயாராக இல்லை.
காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மண்ணான விருதுநகர் தொகுதி தான் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக வர வேண்டும். விருதுநகர் - கொல்லம் இடையே அகல ரயில் பாதையை கொண்டு வந்தவன் நான், மேலும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கியவன் நான், அதனால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கும் தகுதி எனக்கு உள்ளது.30 ஆண்டு காலம் திமுகவில் இருந்தேன். 28 முறை சிறை சென்றுள்ளேன். 6 1/2 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்துள்ளேன்.திமுகவிலிருந்து நான் வெளியேற்றப்பட்ட பின், எனது சகோதரர்களுடன் இணைந்து மதிமுகவை உருவாக்கினேன். நான் சந்தித்த சோதனைகள் சாதாரணமானவை அல்ல. அந்த சோதனைகளை தாங்கக்கூடிய நெஞ்சுரம் எனக்கு இருந்தது. சித் ராஜாபுரத்தில் எனது பேச்சை இவ்வளவு அமைதியாக இருந்து இதுவரை கேட்டதில்லை.தந்தை பெரியார் புகழ் வாழ்க, பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க கலைஞர் புகழ் வாழ்க, ஸ்டாலின் ஆட்சி வெல்க எனக்கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.எம்எல்ஏக்கள் ஆசோகன், ரகுராமன், மதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.