மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் மதுரை மற்றும் கோவையில் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்!
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு 11,368 கோடி ரூபாயிலும், கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் முதல் 20.4 கிலோமீட்டர் தொலைவிற்கும், கோயம்புத்தூர் ஜங்ஷன் முதல் வலியம்பாளையம் பிரிவு 14.4 கி.மீ வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 38 கிலோமீட்டர் தொலைவிற்கு 10,740 கோடி ரூபாயிலும் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது! மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய சென்னை வருகை தந்துள்ள பன்னாட்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் , நேற்று மதுரை மெட்ரோ ரயில் அமையும் இடங்களை ஆய்வு செய்தனர்,இன்று கோவையில் அமைய உள்ள மெட்ரோ வழித்தடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். வங்கி பிரதிநிதிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு நாளை தமிழக நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மெட்ரோ ரயில் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும், அதன் பிறகு ஒன்றிய அரசும் இத்திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்! பன்னாட்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி மதுரை மற்றும் கோவையில் அமையுள்ள மெட்ரோ திட்டங்களுக்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் விரைவில் அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!