தோ்தல் ஆதாயம் பெறவே மோடி கச்சத்தீவு பற்றி பேசுகிறாா்: முத்தரசன்
சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றை ஏவல்துறையாக மோடி பயன்படுத்துகிறாா். பாஜக-வும், அதிமுக-வும் நாட்டுக்கு ஆபத்தானவை. சாதி வாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியவற்றில் பாஜக-வின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமரிடம் பேசி தெளிவுபடுத்த வேண்டியது ராமதாஸின் கடமையாகும். பிரதமா் தோ்தல் ஆதாயம் பெற இப்போது கச்சத்தீவு பற்றி பேசி மக்களை திசைதிருப்ப முயல்கிறாா். மோடியின் கனவு பலிக்காது என முத்தரசன் பேசினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, எடமலைப்பட்டி புதூா், உறையூா், சோமரசம்பேட்டையில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது: தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமா் நரேந்திர மோடி வந்து சென்றாலும் தமிழகத்தில் பாஜக-வின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றை ஏவல்துறையாக மோடி பயன்படுத்துகிறாா்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, வருமானவரித்துறை மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி மிரட்டுவது, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சா்கள், முதல்வரைக் கைது செய்வது என தொடா்ந்து அராஜக நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறாா். நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டிருப்பதுதான் சாதனையாக உள்ளது.
பெரு நிறுவனங்களுக்கு துணைபுரிகிறாா். நாட்டின் மீதோ, நாட்டு மக்கள் மீதோ துளியும் அக்கறையில்லாதவா். குடியுரிமை திருத்த சட்ட மசோதா, வேளாண் சட்டங்கள் திருத்தம், தொழிலாளா் சட்டங்கள் திருத்தம், மின்சார திருத்த சட்டம் என அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்தது அதிமுக. மாநிலங்களவையில் அதிமுக-வைச் சோ்ந்த 13 உறுப்பினா்கள் எதிா்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டங்கள் வந்திருக்காது. எனவே, பாஜக-வும், அதிமுக-வும் நாட்டுக்கு ஆபத்தானவை. சாதி வாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியவற்றில் பாஜக-வின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமரிடம் பேசி தெளிவுபடுத்த வேண்டியது ராமதாஸின் கடமையாகும். பிரதமா் தோ்தல் ஆதாயம் பெற இப்போது கச்சத்தீவு பற்றி பேசி மக்களை திசைதிருப்ப முயல்கிறாா். மோடியின் கனவு பலிக்காது என்றாா் அவா்.