நீலகிரியில் 400க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் தயார்!
நீலகிரியில் அதி கனமழையை சமாளிக்க 400க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-18 01:01 GMT
நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் ஊட்டியில் நடந்தது. ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நிலையில் 3500 முதல் நிலை மீட்பு பணியாளர்கள், 456 நிவாரண மையம், 25 தீயணைப்பு வாகனங்கள், 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 100 ஜே.சி.பி., பவர் சா என மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. சுகாதார துறை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள நிறைமாத கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலை பொருள்கள் தயார் நிலையில் உள்ளது, அதேபோல மழையால் பாதிக்கப்பட்ட கூடிய நியாய விலை கடைகளை உயரமான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நாள்களில் பயணத்தை தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த காலத்தில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படக்கூடும், எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை பாதிப்பு குறித்த தகவலை பகிர கட்டணமில்லா 1077, 1950 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.