நாம் தமிழர் நிர்வாகி கொலை : பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்

கன்னியாகுமரி நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் பாதிரியார் சரணடைந்தார். கொலையாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ;

Update: 2024-01-26 01:23 GMT

போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார்.  இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது.

Advertisement

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின்சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.  இதற்கிடையில் வழக்கில் தேடப்படுபவர்கள் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன்  திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார். பாதிரியார் ராபின்சனை நீதிமன்ற பின்வாசல் வழியாக போலீசார் அழைத்த சென்றனர். கொலையாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News