செஸ் சாம்பியன் ஆவதே எனது லட்சியம் - சர்வானிகா

இன்டர்நேஷனல் செஸ் சாம்பியன் ஆவதே எனது லட்சியம் என உலக சதுரங்கச் சாம்பியன் சர்வானிகா கூறினார்.

Update: 2024-05-04 08:32 GMT

அரியலூர், மே.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர்கள் சரவணன்-அன்பு ரோஜா தம்பதியினர். இவர்களின் மகள் சர்வாணிகா. 8 வயது சிறுமியான இவர் 6வது வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் காட்டி வந்தார். இதையறிந்த அவரது பெற்றோர்கள் சர்வாணிக்காவிற்கு ஊக்கமும், பயிற்சியும் அளித்தனர். பயிற்சியை சரியாக பயன்படுத்திக் கொண்ட சர்வானிகா, சதுரங்கப் போட்டியில் பல வெற்றிகளை பெற்று இன்று நாட்டுக்கு பெருமை தேடி தந்ததோடு,  உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளார்.

தற்போது அல்பேனியா நாட்டில் நடைபெற்ற உலக சதுரங்க சம்மேளனம் நடத்திய செஸ் போட்டியில்,10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சர்வானிகா கலந்து கொண்டு விளையாடினார். இப்போட்டியில் சர்வானிகா ரேபிட் பிரிவில் தங்கமும், பிளிட்ஸ் பிரிவில் வெள்ளியும் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார். இதேபோன்று ஏற்கனவே காமன்வெல்த் போட்டி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சர்வானிகா. இப்படி பல்வேறு வெற்றிகளை தனக்கு சொந்தமாக்கி கொண்ட சர்வானிகா, அவரது வீடு முழுவதும் கோப்பைகளையும், பதக்கங்களையும் மலை போல் குவித்து வைத்திருப்பது அவரது சாதனையின் அடையாளத்தை பறைச்சாற்றுகின்றது. அல்பேனியா நாட்டில் உலகச் சாம்பியன் பட்டம் என்ற சர்வாணிகாவிற்கு அவரது சொந்த ஊரான உடையார்பாளையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரீ ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷஜிதா, மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சர்வாணிக்காவை வாழ்த்தினார். நிகழ்ச்சிகள் செய்தியாளர்களிடம்  பேசிய சர்வானிகா, சிறு வயதில் இருந்தே எனக்கு செஸ் போட்டியில் ஆர்வமாக இருந்தேன். எனது பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர், நண்பர்கள் என அனைவரும் ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாகத்தான் என்னால் சாதனை படைக்க முடிந்தது. உலக அளவில் விளையாடும் போது, தங்கம் வென்றால் மட்டுமே அந்த நாட்டின் தேசிய கீதம் ஒளி பரப்பப்படும். கடந்த முறை நான் வெள்ளிப் பதக்கம் வாங்கிய போது நம் நாட்டு தேசிய கீதம் ஒளிபரப்பவில்லை. இது எனக்கு வேதனையாக இருந்தது. இந்த முறை கண்டிப்பாக நமது நாட்டு தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும்.

இதற்காக நாம் கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிதான் இந்த போட்டியில் பங்கேற்றேன். வெற்றியும் பெற்றேன், நம் நாட்டிற்கு பெருமையும் தேடி தந்தேன். தங்கப்பதக்கம் வென்றால் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பதால், கடுமையாக உழைத்து தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதத்தை பாட வைத்தேன். இது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. தற்பொழுது நான் பல போட்டிகளில் வென்றதன் மூலம் 1757 புள்ளிகளை பெற்றுள்ளேன். 1800 புள்ளிகளை பெற்றால் உமன் இன்டர்நேஷனல் செஸ் மாஸ்டர் ஆகலாம். இந்த வருடத்திற்குள் 43 புள்ளிகளை எடுத்து நான் உமன் இன்டர்நேஷனல் செஸ் மாஸ்டர் ஆவேன் என்று நம்பிக்கையுடன் சர்வானிகா தெரிவித்தார்.

மேலும் விரைவில் இத்தாலி மற்றும் சங்கேரி ஹங்கேரி நாடுகளில் நடைபெற உள்ள செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் இதற்கு தேவையான உதவிகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் சர்வானிகா கோரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சர்வானிகா மழலை ததும்ப தெரிவித்தது அங்கிருந்த பார்வையாளர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

Tags:    

Similar News