என் பெயர் தான் உன் பெயர் - குழந்தைக்கு பெயர் சூட்டிய கனிமொழி எம்பி

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு "கனிமொழி" என கனிமொழி எம்பி பெயர் சூட்டினார். ;

Update: 2023-12-27 05:28 GMT
குழந்தையுடன் கனிமொழி எம்பி 

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவுகளுக்கு மேல் தண்ணீர் வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்த மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை இழந்து உண்ண உணவின்றி சிரமப்பட்டனர்.மேலும் சிலர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், தமிழக அமைச்சர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர், கப்பல் படையினர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து மீட்பு பணி, நிவாரண பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தமிழக எம்பி கனிமொழியும் தனது சொந்த தொகுதியான் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதோடு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று மீட்பு பணி நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். குறிப்பாக மக்களோடு மக்களாக பயணித்து அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டு செய்து வந்தார். மழை பெய்து கொண்டிருக்கும்போது கூட டிரக்கில் சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். ரொட்டி, பிஸ்கட், சாப்பாடு, போர்வை என பல்வேறு பொருட்களை வழங்கினார். சாலையில் வெள்ளம் தேங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அப்போது மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணையும் அவரது வாகனத்தை அனுப்பி வைத்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார். கடந்த 21ஆம் தேதி கொற்கை ஊராட்சி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த அபிஷா என்ற பெண்ணை மீட்பதற்காக தனது வாகனத்தை கனிமொழி அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரது வாகனத்தில் வெள்ளத்தில் 3 வது மாடியில் சிக்கி தவித்த கர்ப்பிணி அபிஷா மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்போதும் விடாமல் தூத்துக்குடியில் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கும் திமுக எம்பி கனிமொழி, அபிஷாவையும் அவரது குழந்தையையும் சந்திக்க வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற கனிமொழி எம்பியை அபிஷாவின் குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும் எங்களது குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்ற செல்ல கோரிக்கையையும் வைத்தனர்.  மேலும் உங்களது பெயரையே வையுங்கள் என்றும் குழந்தையின் பெற்றோர் ஆசையுடன் கூறினர். இதனை தொடர்ந்து கனிமொழி எம்பி, குழந்தையின் காதில் மூன்று முறை கனிமொழி.. கனிமொழி.. கனிமொழி என்று கூறினார். இதனையடுத்து குழந்தையின் தாய் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 9 நாட்களாக எம்பி கனிமொழி களத்திலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News