உள்துறை அமைச்சக தீ விபத்து குறித்து விசாரணை தேவை - கி.வீரமணி

ஒன்றிய அளவில் இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற வலுவான செய்திகள் வந்து கொண்டிருக்கையில், டெல்லியில் முக்கியமான இடத்திலே அதிக பாதுகாப்பிலே உள்ள உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து எப்படி ஏற்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த தீ விபத்தில் முக்கியமான ஆவணங்கள் எரிந்திருக்க கூடும் எனவும் செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்து சுதந்திரமான தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2024-04-17 08:22 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காந்தி பூங்கா அருகில் திராவிடர் கழகம் சார்பில், இந்தியா கூட்டணியில், திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு, திராவிடர் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், இளங்கோவன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மற்றும் திராவிடர் கழகம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் தலைவர்கள் கட்சியினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது, தென்காசி தொடங்கி தஞ்சை வரை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் 28க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டோம். மக்களின் வரலாறு காணாத வரவேற்பு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், திமுக தலைமையிலான தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உள்ளது. காரணம் கடந்த 10 ஆண்டு காலமாக மோடியின் ஆட்சி, கடுமையான வெப்பச்சூழலை விட, கொடுமையான அரசியல் வெப்பத்தை தந்துள்ளது என மக்கள் உணர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வெற்றி மாத்திரம் அல்ல, தென் மாநிலங்கள், வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் 2014 இல் இருந்தது போல் மோடிக்கு ஆதரவான அலை இல்லை. அவருக்கு எதிரான அலை வீசுகிறது. ஆகவே ஜூன் 5 ஆம் தேதிக்கு பிறகு ஒரு புதிய ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்.  ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஒன்றிய அளவில் இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற வலுவான செய்திகள் வந்து கொண்டிருக்கையில், டெல்லியில் முக்கியமான இடத்திலே அதிக பாதுகாப்பிலே உள்ள உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து எப்படி ஏற்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த தீ விபத்தில் முக்கியமான ஆவணங்கள் எரிந்திருக்க கூடும் எனவும் செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்து சுதந்திரமான தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அண்டை நாடுகளின் பிரச்சனை, உள்நாடுகளின் பிரச்சனை என பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கையாளக்கூடிய, உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து என்பதும், முக்கியமான காலகட்டத்தில், புதிய ஆட்சி அமைய சில மாதங்களே உள்ள நிலையில், தீ விபத்து ஏற்பட்டிருப்பது என்பது ஜனநாயகத் தீயினால் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தை அணைக்க கூடிய வகையில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டிருக்கிறதோ என ஐயம் எழுந்துள்ளது.  இந்தியா கூட்டணி சார்பில் யார் பிரதமர் என, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தான் முடிவெடுக்க முடியும். அது தான் ஜனநாயகமும் கூட, பாஜக கூட்டணிக்கு மோடி தான் பிரதமர் இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என தமிழ்நாட்டிலே போனியாகாத ஒரு தலைவர் கேட்டுள்ளார்.

அதற்கு முதலமைச்சர் தெளிவாக பதில் சொல்லி விட்டார். "யார் வரக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டனர். யார் வரப்போகிறார்கள் எனவும் தேர்வு செய்து விட்டனர். பிரதமர் முகம் என்பது இந்தியா கூட்டணியின் முகம்" எனத் தெளிவுபடுத்தி விட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே முன்மாதிரி உள்ளது. ஜனதா கட்சியாக தேர்தலை சந்தித்த போது கூட யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகே, மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதிலே தான் வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் இடம் பெற்றனர்.  இந்திய ஜனநாயகம் தற்போது மரணப்படுக்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.

ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தியால் தான் முடியும். அந்த மக்கள் சக்தியை திரட்டக்கூடிய, அபரிமிதமான செல்வாக்கு பெற்ற இருவரில் ஒருவர் நமது ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றொருவர் இந்தியா முழுவதும் மக்களை ஈர்த்திருக்கக் கூடிய சிறப்பான தலைவர் ராகுல் காந்தி, மோடி போன்றவர்கள், முடிந்து போன உடலைக்கூட வெண்டிலேட்டரில் வைத்து காப்பாற்றி விடுவேன் எனச் சொல்லக் கூடியவர் என்பதை உணர வேண்டும். 

தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு 9 முறை வந்த பிரதமர் மோடி, தனது வாழ்நாளில் கடைந்தெடுத்த பொய்களை மட்டுமே சொல்லக்கூடிய மோடி, நெல்லையில் ஒரு உண்மையைச் சொல்லி உள்ளார். தமிழ்நாட்டிற்கு தேர்தல் பயணமாக வருவது இது தான் கடைசிப் பயணம் என்று சொல்லி உள்ளார். அவர் வருவதும், அவரது கட்சி ஆட்சிக்கு வருவதும் இது தான் கடைசி என்பது தான் இதன் பொருள். ஜூன் 5 ஆம் தேதி மோடி ஆட்சிக்கு இந்திய மக்கள் விடை கொடு‌க்கு‌ம் நாளாக அமையும். பஞ்சாப், குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், தமிழகம், தென்மாநிலங்கள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது வெறும் கருத்துக் கணிப்பல்ல... அது மக்களின் குரல்" இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

Similar News