நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்பு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் காணாமல் போனநிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Update: 2024-05-04 13:31 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் காணாமல் போனநிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், தனது உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் வருவதாக, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 30ம் தேதி புகார் மனு அளித்திருந்த நிலையில் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது உயிருக்கு உறுதியான ஆபத்தான மிரட்டல்கள் இருப்பதாலேயே தான் புகார் அளிப்பதாக, மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்திருந்த புகார் மனுவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மனுவின் அடிப்படையில் அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்காமல், மிகவும் அலட்சியமாக இருந்த காரணத்தாலேயே அவர் இன்றைக்கு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. எல்லோராலும் அறியப்பட்ட ஒரு கட்சியின் மாவட்டத் தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக நிற்கின்றது. ஆகவே, இந்த விவகாரத்தில், மர்மான முறையில் மரணமடைந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும், சட்டம்-ஒழுங்கையும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News