பெரியாரை எதிர்ப்பவர்களை பாமக எதிர்க்கும் - அன்புமணி ராமதாஸ்

பெரியார்,அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர் தான் பாமகவின் முன்னோடிகள், எங்கள் கட்சியின் வழிகாட்டிகள். முன்னோடிகளை எதிர்பவர்களை பாமக எதிர்க்கும்.- அன்புமணி

Update: 2023-11-10 02:20 GMT
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம், அரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது : தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. வேளாண் விளை பொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீ ர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும். மொரப்பூர்-தருமபுரி ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்துக்கு தற்போது ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கட்டாயம் நிறைவேறும். அரூர் சட்டப் பேரவைத் தொகுதி தனித் தொகுதி என்பதால் எவ்விதமான வளர்ச்சி இல்லை. எனவே, அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர் தான் பாமகவின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள். முன்னோடிகளை எதிர்பவர்களை பாமக எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டுவந்தவர் தந்தை பெரியார். பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில் முன்பாக உள்ள பெரியார் ஈ.வெ.ராவின் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றார். இதையடுத்து, அரூர் என்.என். மஹாலில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் பாமக தேர்தல் களப் பணியாளர்களுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினர். தொடர்ந்து, தருமபுரி ஒன்றியம், கொல்லப்பட்டி பிரிவு சாலையில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபத்தின் பணிகளையும் அவர் தொடக்கி வைத்தார். இதில், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி, பாமக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலர் இரா.அரசாங்கம், மாவட்ட தலைவர் அல்லிமுத்து தனி செயலாளர் சொல்லின் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News