தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் வசிக்கும் அகமது என்பவரது வீ்ட்டுக்கு ஞாயிறு காலை 6 மணிக்கு என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சென்ற குழுவினர் காலை 11.30 மணி வரை அகமதுவிடம் விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர். அதே போல், தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ ஆய்வாளர் அருண்மகேஸ் என்பவர் தலைமையில் அதிகாரிகள் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை விசாரணை நடத்திச் சென்றனர்.
மேலும், தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரகுமான் ஆகியோரது வீடுகளில் என்ஏஐ கூடுதல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் காலை 7.30மணி முதல் காலை 11.30 மணி வரை சோதனை நடத்திச் சென்றனர். இந்த சோதனையின் போது என்ஐஏ அதிகாரிகள் சில பென்டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.