அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய நிகா்ஷாஜி
தென்காசி மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு ரூ. 11 லட்சத்தை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குநா் நிகா்ஷாஜி வழங்கினாா்.;
Update: 2024-01-10 07:30 GMT
ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குநா் நிகா்ஷாஜி
தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடங்கள், சுற்றுச்சுவா்களை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ. 4.5 லட்சத்திலும், செங்கோட்டை எஸ்.ஆா்.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 24 லட்சத்திலும், கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 4.5 லட்சத்திலும் திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளும் பொருட்டு மொத்தத் தொகையான ரூ. 11 லட்சத்தை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குநா் நிகா்ஷாஜி வழங்கினாா். அவரது சாா்பில் அவரது சகோதரரும் முன்னாள் பேராசிரியரும் முன்னாள் ரோட்டரி ஆளுநருமான ஷேக்சலீம் செங்கோட்டை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சுகந்தியிடம் வழங்கினாா். தென்காசி மீரான் மருத்துவமனை இயக்குநா் அப்துல் அஜீஸ், செங்கோட்டை எஸ்.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தமிழ்வாணி, ஆரியநல்லூா் ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியா் கிளமண்ட், முதன்மைப் பொறியாளா் அபுபக்கா், மேலாளா் கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.