இந்தியா கூட்டணியின் மனசாட்சி முதல்வர் ஸ்டாலின் - செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் தமிழக முதல்வர் இருக்கிறார். இதனால் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லாமல் சுமூகமாகச் செல்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Update: 2024-03-06 14:50 GMT

செல்வப்பெருந்தகை 

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் புதன்கிழமை பிற்பகல் வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் தமிழக முதல்வர் இருக்கிறார். எனவே, ஒருபோதும் இழுபறி இல்லாமல், சுமூகமான தீர்வு கிடைக்கும். நாம் எவ்வளவு கேட்கிறோமா அவ்வளவு கொடுப்பார். மாநிலக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையே இன்னும் முடிவடையவில்லை. காங்கிரஸ் தேசியக் கட்சி என்பதால், அகில இந்தியத் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் முடிவு செய்ய முடியும்.

எனவே, கூட்டணி பேச்சுவார்தையில் எந்தவித தாமதமும் இல்லை. மகிழ்ச்சியாக நடைபெறுவதால், இனிப்பான செய்திகள் வரும். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கத்தைத் தமிழக முதல்வர் குறைத்து மதிப்பிடமாட்டார். எங்களது உயரத்தைப் புரிந்து வைத்துள்ள தமிழக முதல்வர் எங்களுக்கு தேவையான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வார்.

மோடி கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களை ஒரு முறை கூட பார்க்கவில்லை. அப்போது மக்களைப் பார்க்க வராத மோடி, இப்போது வாக்குக்காக மட்டும் வந்து பார்க்கிறார். பகல் கனவு காணும் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். என்றார் .

பொய்யும், புரட்டுமாக பேசும் மோடி அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக, காங்கிரசை அழிப்பேன் எனக் கூறுகிறார். அவரது கட்சி இத்தேர்தலில் இருக்கிறதா என பார்ப்போம். புதுச்சேரியில் 4 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழிசை செüந்தரராஜன், வானதி சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்பட யாருமே வாய்த் திறந்து நீதி கேட்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும், பெரிய அளவுக்கு கொக்கரிப்பர் என்றார் செல்வப்பெருந்தகை. முன்னதாக, செல்வப்பெருந்தகையை மாவட்டத் தலைவர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார் (தெற்கு), பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர) உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Tags:    

Similar News