எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது - மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தவே 26 கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளதாக திருச்சியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: டெல்டாவில் உள்ள கட்சியின் 15 மாவட்டங்களில் இருந்து 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் தேர்தல் பணிக்கென தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, 10 பேரை சந்திக்க வேண்டும். இதனால், ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடி வாக்காளர்கள் அனைவரையும் சந்தித்துவிடலாம்.
வாக்காளர்கள் ஒருவேளை உங்களை புறக்கணித்தாலும், தொடர்ந்து புன்னகையுடன் அவர்களை சந்தித்து, திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள், தேர்தல் நடைமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, போலி நபர்கள், இறந்தவர்களின் பெயரை அடையாளம் கண்டு நீக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்ப விவரங்களை அறிந்து, அவர்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தெரிவிக்கும் தகுதி வாய்ந்த கோரிக்கைகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்டாயம் நிறைவேற்றி தர வேண்டும். யாரும் குறைகூற முடியாத நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.