உயிரிழிந்த வடமாநில மாணவர்- போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்

கல்லூரியில் உடல் நலம் பாதித்த வட மாநில மாணவர் உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் எனக்கூறி வட மாநில மாணவர்கள் திடீர் போராட்டம் .

Update: 2023-11-30 03:31 GMT

போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் செயல்பட்டு வரும் எக்ஸெல் பொறியியல் கல்லூரியில் பி.டெக் ஐ.டி மாணவர்களுக்கு தற்பொழுது தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில், மூன்றாம் ஆண்டு படிக்கும் பீகர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சத்யஜித் குமார் தேர்வு அறையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரை, சக மாணவர்களும், ஆசிரியர்களும் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் கல்லூரி விடுதியரையில் தங்க வைத்தனர்.

திடீரென மாலை மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், விடுதி காப்பாளரிடம் தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சத்தியஜித் குமார் அனுமதி கோரியுள்ளார். அதற்கு விடுதிக்காப்பாளர், அவர் வெளியே செல்ல அனுமதி மறுத்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்தியஜித்குமார், மீண்டும் விடுதியில் உள்ள தனது அறைக்கு சென்று படுத்துள்ளார்.

கல்லூரி வேலை முடிந்ததும், வந்த சக மாணவர்கள் சத்திய ஜித் குமாரை எழுப்பிய பொழுது, அவர் எழுந்திரிக்காததால், அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்பொழுது அங்கு அவரை பரிசோதித்த, அரசு மருத்துவர் சத்தியஜித்குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி கல்லூரி தங்கும் விடுதியில் சக வட மாநில மாணவர்களுக்கு பரவியதால், ஆத்திரம் அடைந்த வட மாநில மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மாணவர்கள் சத்தியஜித்குமார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த விடுதி காப்பாளரை கூட்டாக சேர்ந்து தாக்கியதுடன், விடுதி வளாகத்தை அடித்து சேதப்படுத்தி போர்க்களம் ஆக்கினர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார், கல்லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களை சமாதானப்படுத்த முயன்று தோல்வியடைந்ததால், சேலம், நாமக்கல் விரைவுப் படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் வட மாநில மாணவர்கள் தங்களுடைய கோரிக்கையாக, உடனடியாக உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும் கல்லூரி மாணவர் உயிரிழந்ததற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பு ஏற்று, அவர் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும், மாணவருடைய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்து, இறுதி மரியாதைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு போலீசார் ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இன்னும் பதற்ற நிலை நீடிப்பதால் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News