ஐ.டி., சோதனையில் ஒரு பைசா கூட கைப்பற்றபடவில்லை -அமைச்சர் எ.வ.வேலு
:'வருமான வரித்தறை சோதனை நடத்தியதில், என்னிடமோ, எனது மகன்கள், மனைவியிடமோ ஒரு காசு கூட கைப்பற்றவில்லை,'' என,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில், திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை நேற்று இரவு 10:30 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்து வலைதளங்களில் கற்பனையாகவும், முரண்பட்ட கருத்துகளும் கூறப்பட்டன. அது தவறு, அதற்கு விளக்கம் கொடுப்பது எனது கடமை. ஐ.டி. ரெய்டு என்பது தவறு இல்லை. அது அவர்களுடைய கடமை. ஆனால், சோதனை என்ற பெயரில், என் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனை, 5 நாட்களாக தனிமைப்படுத்தி கண்ணீர் வருமளவுக்கு அச்சுறுத்தி கேள்வி கேட்டு துன்புறுத்தியுள்ளனர். எனது டிரைவரையும் தனிமைப்படுத்தி பல்வேறு கேள்வி கேட்டுள்ளனர். மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு என்னிடம் கேள்விகள் கேட்டனர். கல்லுாரி தங்கும் விடுதியில் ஆய்வு என்ற பெயரில் சல்லடை போட்டு தேடினர். என்னுடன் தொடர்புடையவர்களிடம், விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலை என பல்வேறு இடங்களில் கேள்வி கேட்டு அச்சுறுத்தி சோதனை நடத்தினர். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. பின் அச்சகம் தொடங்கி, லாரி உரிமையாளராகி, பட தயாரிப்பாளர், பட வினியோகஸ்தர், அதன் மூலம் ஈட்டிய பணத்தில் சரஸ்வதியம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கினேன். கடந்த, 2001ல் அமைச்சரான போது அதிலிருந்து விலகிவிட்டேன். என் பெயரில், 48.33 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது. ஒரு வீடு எனது பெயரில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ஒரு சென்ட் இடம் கூட நான் வாங்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன், என்மேல், 2013ல், 11 லட்சம் ரூபாய் சேர்த்ததாக வழக்கு போடப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று, தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது பா.ஜ., ஆட்சியில் வருமான வரித்துறை என்பது, பா.ஜ., ஒரு அணிபோல் செயல்படுகிறது என உதயநிதி கூறியுள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதுபோன்று ரெய்டு நடக்கவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் அச்சுறுத்தும் நோக்கத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. காசா கிராண்ட் யாரென்று தெரியாது. அப்பாசாமி ஓட்டலில் தங்கியுள்ளேனே தவிர, அவர் யார் என்று எனக்கு தெரியாது. கோவை ஜெயக்குமார், திருவண்ணாமலையை சேர்ந்தவர். கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். நான் அங்கு சென்றால், சொந்த ஊர்க்காரர் என்ற முறையில் வரவேற்பார். அதை தவிர வேறெந்த தொடர்பும் இல்லை, அவரது மனைவி மீனா யாரென்று எனக்கு தெரியாது. அவருடன் தொடர்பு ஏற்படுத்தி என் கேரக்டரை கெடுக்க நினைக்கிறார்கள். அபிராமி ராமநாதன் யார் என்று எனக்கு தெரியாது. என்னுடைய வீட்டிலோ, எனது மகன்கள் வீட்டிலோ, மனைவியிடமோ வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு பைசா (காசு) கூட கைப்பற்றப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.