ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு
திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06675 மற்றும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து 11.05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் 06679, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மறுமார்க்கத்தில், திருச்செந்தூரிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி வரை செல்லும் வண்டி எண் 06680 மற்றும் மாலை 06.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06678, ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06409 ரயிலானது, 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. மேலும், 16732 திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பாலக்காடு செல்லும், மற்றும் வண்டி எண் 16731 பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் ரயில் திருநெல்வேலியில் நிறுத்தப்படும்.இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதே போல செங்கோட்டை, தென்காசி - திருநெல்வேலி ரயில் போக்குவரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. நாளை திருச்செந்தூரில் மாசி திருவிழா நடைபெற உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.