போலியான சமூக வலைதள பதிவுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் போலியான பதிவுகள் மூலம் தவறான பதிவுகள் பதிவிடப்பட்டால் காவல்துறையின் கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொள்ள சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
சமீபத்தில் மேடவாக்கம் பகுதியில் ஏழு குழந்தைகளின் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பொதுமக்கள் கவனமாக இருப்பதுடன், தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், பெண் ஒருவரின் குரல் பதிவுடன் கூடிய குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான காணொளிப் பதிவு ஒன்று வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. மேற்படி காணொளி பதிவு தவறான காணொளி எனவும், அந்த காணொளியில் காண்பிக்கப்படும் குழந்தைகளின் உடல்கள், சில வருடங்களுக்கு முன்பு வேறொறு இடத்தில் வேறு சில காரணங்களினால் உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் எனவும் தெரியவருகிறது.
இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவில் ச/பி 153, 505(1)(b), 505(2) இதச மற்றும் பிரிவு 67 தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கிறது.
இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்தாலோ காணொளிகளை பார்க்க நேர்ந்தாலோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. தேவையெனில் சென்னை பெருநகர காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.