தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
சத்தியில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சத்தியில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முன் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சத்தி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஆலத்துக்கோம்பையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் 161 பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பள்ளி வாகனங்களை கோபி ஆர்டிஒ வெங்கட்ரமணி, சத்தி டிஎஸ்பி சரவணன், சத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் ஆகியோர் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பு கருவிகள், அவசர கால வெளியேறும் வழிகள் உட்பட 16 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
இதில் 40 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பள்ளி வாகன ஒட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்தால் அணைப்பது குறித்து பயர் ஆபிஸர் ரங்கராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் டெமோ செய்து காண்பித்தனர். விழாவில் தனியார் பள்ளி முதல்வர் ஷியாமளாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டார்.