மோசடி வழக்கில் ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளரின் நண்பர் கைது

மோசடி வழக்கில் ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-08 12:16 GMT
கைது செய்யப்பட்ட அங்குராஜ் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூரில், ஆம்னி பேருந்து நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின், நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில், முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் பங்கு தருவதாக, பலரிடம், சுமார் ரூ.1 லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதம் 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கினார்.   பின்னர், சில மாதங்கள் வழங்கிய நிலையில், பங்கு தொகையை வழங்காமல் மோசடி செய்து விட்டு, பங்குதாரர்கள் பணத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்தார்.

ஆனால், கடந்த 2021 ஆண்டு செப்.19 ஆம் தேதி கமாலுதீன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து பங்குதாரர்கள், ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரீஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்டனர். ஆனால், அவர்கள் தர மறுத்து விட்டனர்.

இது குறித்து காவல்துறைக்கு பல்வேறு புகார்கள்  வந்தன. இதையடுத்து வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என ஏற்கனவே 13 பேரை கைது செய்தும், 16 பேருந்துகள், 8 மினி பேருந்துகள், 6 டூ வீலர், 16 கார், ஒரு ஜே.சி.பி., 3 டிராக்டர் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கமாலுதீன் நண்பரும், தொழில் பங்குதாரருமான ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளரான, தஞ்சாவூரை சேர்ந்த அங்குராஜ் (41), என்பவர் ராஹத் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி குவித்தார். இது தொடர்பாக பொருாளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி புதன்கிழமை இரவு அங்குராஜை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News