நீலகிரியில் ஒரு கோடி மகளிர் பயணம்!

நீலகிரியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில், பயணம் செய்த மகளிர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது.

Update: 2024-05-13 14:48 GMT

2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசு பேருந்து" மகளிர் விடியல் பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஜூலை 2021-ல் நடைமுறைக்கு வந்தது. விடியல் பயணம் என பெயரிடப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மகளிர் விடியல் பயண திட்டம் நீண்ட நாட்களாக செயல்படுத்தப்பட்டால் இருந்தது. பின்னர் நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது‌. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 445 கோடி முறை பயணம் செய்து ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் ரூ.888 வரை சேமித்து உள்ளனர். அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியை பொறுத்தவரை இதுவரை 59 ஆயிரத்து 191 மாற்று திறனாளிகள், 1638 மாற்று திறனாளிகளுக்கு துணையாக செல்பவர்கள், 1605 திருநங்கைகள், 1 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 327 மகளிர் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 761 பேர் பயன் பெற்று உள்ளனர். இந்த திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்துடன் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். .

Tags:    

Similar News