தொடரும் வளர்ப்பு நாய்க்கடி சம்பவம் - மாணவனை கடித்த ராட்வீலர் நாய்.
சென்னை கொளத்தூரில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை ராட்வீலர் நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் டியோபஸ் ஜெரால்டு என்பவரை ராட்வீலர் நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் கடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் டியோபஸ் ஜெரால்ட் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிற்பகல் இவர் வீட்டின் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றார். அப்பொழுது இவரது வீட்டில் அருகே வளர்க்கப்பட்டு வரும் ராட்வீலர் என்னும் நாய் இவரை துரத்தி துரத்தி வெறித்தனமாக கடித்ததாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து மாணவனின் அழுகை குரல் கேட்ட தந்தை மற்றும் தாயார் இருவரும் இணைந்து அந்த ராட்வீலர் நாயை விரட்டினர். ஆனாலும் தொடர்ச்சியாக அந்த நாய் அவரை துரத்தி துரத்தி கடித்ததால் அவருக்கு தலை, முதுகு, கழுத்து, காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிறுவனின் தாய் தந்தை உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனிடையே ராட்வீலர் நாய் தொடர்ந்து அவரை கடித்ததால் அவருடைய இடது காது துண்டான நிலையில் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த ராட்வீலர் நாயின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.