ஊட்டியில் மலர் கண்காட்சி

ஊட்டி மலர் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிதாக காளான் உட்பட 5 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-05-17 01:23 GMT

மலர் கண்காட்சி 

உலகப் புகழ்பெற்ற 126-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளை கவர டிஸ்னி வேர்ல்ட், நீலகிரி பாரம்பரிய மலைரெயில் என 2 லட்சம் மலர்களால் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டன. மேலும் முயல், பிரமிடு உள்பட பல்வேறு மலர் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அரசு தாவரவியல் பூங்கா மலர் மாடங்களில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இந்தாண்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக முதல் நாள் இரவு 7 மணிக்கு லேசர் லைட் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லேசர் லைட் நிகழ்ச்சியில் ஊட்டியின் அடையாளமான நீலகிரி வரையாடு, தோடர் மக்களின் குடிசை வீடு மற்றும் படுகர் மக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மலர்கண்காட்சி முதல் நாளில் 25,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை சிக்கல்கள், ஒரே நாளில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி மற்றும் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் கூட்டம் குறைந்தது.‌ முதல் நாளில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 15,000 பேரும், இரண்டாவது நாள் சுமார் 18,000 பேரும் வந்தனர். நான்காவது நாளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளும் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக 32 ஆயிரம் மலர்களை கொண்டு கூடுதலாக 5 மலர் வடிவங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக கிட்டார், காளான், படகு, ஆக்டோபஸ், பாராசூட், மலர் கொத்து ஆகிய வடிவங்கள் 32 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்ககும் பணி தொடங்கியுள்ளது.

இதேபோல் மழைக்கு சேதம் அடைந்த டிஸ்னி வேர்ல்ட் உருவத்தையும் மலை ரெயிலையும் 80,000 மலர்களால் சரி செய்யப்படுகிறது.

Tags:    

Similar News