ஊட்டி மலர் கண்காட்சி மே.10 ல் துவக்கம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, 126வது மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மலர்க் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட 388 ரகங்களிலான 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை இன்று துவக்கி வைத்தார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படும். இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலை அனுபவிக்க ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி , வாசனை பொருள் கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சிகளுக்கான தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி 126வது மலர்க்கண்காட்சி துவங்கி 20ம் தேதி வரை 10 நாட்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. இதற்காக தயார் செய்யப்பட்ட 35 ஆயிரம் மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென்டல்கேஸ், ஓரியண்டல்லில்லி, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 75 இனங்களில் 388 வகையான ரகங்கள் சுற்றுலா பயணி பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மலர் கண்காட்சிக்காக மலர் அலங்காரத்தை , மலர் மாடத்தில் பூந்தொட்டிகளை அடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார்
. இந்த ஆண்டு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர்கண்காட்சியின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக மே10 தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய இரு நாட்கள் தாவரவியல் பூங்காவில் " லேசர் லைட் " காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருணா கூறுகையில், "10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதேபோல மே 10ஆம் தேதி முதல் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி 9 நாட்கள் நடத்தப்படும். இந்த கோடை விழாவில் மலர்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி மே 24 முதல் 26ம் தேதி மூன்று நடத்தப்படும்,"என்றார்.