சுற்றுலாப் பயணிகளை கவரும் ஊட்டி ரோஜா பூங்கா

கோடை சீசனுக்கு முன்பாகவே ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-03-01 01:44 GMT

கோடை சீஸனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு 100வது மலர் கண்காட்சி பூங்காவில் நடந்தது. அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை தொடங்கி வைத்தார்.

மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்கு என 4.5 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் சுமார் 4,200 வகைகளை சேர்ந்த 40,000 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் வெளிநாட்டு ரோஜா செடிகளும் உள்ளன. உலக ரோஜா சம்மேளனம் விசே‌ஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியது.

ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்களை கொண்ட இந்த பூங்காவில் தற்போது மே மாதத்தில் நடைபெறும் ரோஜா கண்காட்சிகாக கவாத்து செய்யும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன. பூங்காவில் உள்ள 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளதால் பூங்கா ரோஜா செடிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லாமல் இருக்க பூங்காவின் ஒரு பகுதியில் மட்டும் 194 ரகங்களிலான 2 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படாமல் பராமரிக்கப்பட்டு வந்தன.

தற்போது அந்த ரோஜா செடிகளில் மட்டும் வண்ண வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் சிறியது முதல் பெரியது வரை என வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக உள்ளன. ஒரே பகுதியில் பல ரகங்களிலும், நிறங்களிலும் சிறியது முதல் பெரிய அளவிலான ரோஜா மலர்களை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே பூங்காவில் தற்போது கவாத் செய்யப்பட்டுள்ள 38000 ரோஜா செடிகள் நன்றாக வளர்ந்து மே மாதத் தொடக்கத்தில் பூக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News