நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-04-15 05:36 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி அவர்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து வேலூருக்கு 75 பஸ்கள், பெங்களூருவில் இருந்து வேலூருக்கு 15 பஸ்கள், சென்னையில் இருந்து தர்மபுரி, ஒசூருக்கு தலா 10 பஸ்கள், வேலூரில் இருந்து திருச்சிக்கு 10 பஸ்கள் என்று மொத்தம் 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் 18-ந் தேதி காலை முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.