உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்
பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
Update: 2023-12-16 06:05 GMT
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தேகளீச பெருமாள் புறப்பாடு நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக முதல் பத்து நாட்கள் பகல் பத்து விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 10:00 மணிக்கு தேகளீச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு தேகளீச பெருமாள் பாண்டியன் மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு சுவாமி புறப்பாடாகி ஆலய பிரதட்சணமாக வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார்.பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக வரும் 22ம் தேதி இரவு பெருமாள் மோகன அலங்காரத்தில் சாத்துபடி, திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.