பள்ளிகொண்டா காவல் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை!
பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாமகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம், பள்ளிகொண்டாவை அடுத்த வேப்பங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), தி.மு.க.வை சேர்ந்தவர். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் பாட்டில் மணி என்கிற ரவிக்குமார், சந்துரு என்கிற சந்திரசேகர் (37), விநாயகம். இவர்கள் பா.ம.க.வை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, வேப்பங்கால் வாக்குச்சாடியில் மாலை 5 மணியளவில் சதீஷ்குமார் மற்றும் பாட்டில் மணி உள்ளிட்டோர் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடயே வாக்குவாதம் ஏற்பட்டு பாட்டில் மணி, சந்துரு, விநாயகம் ஆகியோர், சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சதீஷ்குமார் அந்த மூன்று பேரை தாக்கியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சதீஷ்குமார் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை அன்று இரவு கைது செய்தனர். இது குறித்து வேலூர் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பள்ளி கொண்ட நகர செயலாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினர் மீதும் வழக்கு போடாமல், ஒரு தரப்பினர் மீது மட்டும் வழக்கு போட்டுள்ளதாகவும், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, பொய்வழக்கு போட்டுள்ளனர் எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.