கலவை அருகே அம்பேத்கர் சிலை அருகில் பாமக கொடி: மோதல்
கலவை அருகே அம்பேத்கர் சிலை அருகில் பாமக கொடி வைத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் அருகே நள்ளளிரவு பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எந்த அனுமதியும் பெறாமல் இரவோடு இரவாக அக்கட்சியின் கொடி மற்றும் வன்னியர் சங்க கொடி என இரண்டு கொடிகம்பம் நட்டுள்ளனர்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நாக்லேரி சிவா ஊர் பொது மக்கள் இளைஞர்கள் அம்பேத்கர் சிலை சுற்றி எந்த சாதிக் கொடியும் எந்த கட்சிக் கொடியும் வைக்க கூடாது என கூறி கொடிக்கம்பத்தை அகற்றியதாக தெரிகிறது.
மேலும் கொடி கம்பத்தை அகற்றியதை தெரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மீண்டும் கொடிக்கம்பத்தை நட்டுள்ளனர். இதனால் விசிக மற்றும் பாமக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு கொடிக்கம்பத்தை வைக்க கூடாது என விசிக மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கலவை காவல் நிலைய போலீசார் நிறுவப்பட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி கம்பத்தை டிராக்டர் உதவியுடன் கொடி கம்பத்தை அகற்றினர்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அக்கட்சியின் கொடிக்கம்பம் அந்த இடத்தில் நிறுவ வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி கம்பத்தை சாலையில் போட்டு சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பதட்ட நிலையிம் நிலவியது.
தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கலவை தாலுகா காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சாலமோன், மாவட்ட கவுன்சிலர் சிவகுமார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்..