பங்குனி மாத கிருத்திகை கிரிவலம்!
காவேரிப்பாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத கிருத்திகை கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-04-12 11:20 GMT
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் குன்றின் மீது வள்ளி-தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 27 அடி உயரத்தில் மலேசிய முருகன் சிலை மற்றும் சரவணப் பொய்கை குளம் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை தினத்தில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலையில் வள்ளி-தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டவாறு கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.