பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வராததை கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-22 14:12 GMT
மறியல் போராட்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி ஊராட்சிக்கு உட்பட்ட ராமதேவநல்லூர் கிராமத்தில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் மெயின் ரோட்டு தெருவில் அமைந்துள்ள போர்வெல் பழுது ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு சரிவர தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரியிடம் தெரிவித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அக்கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு, காட்டுமன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீன்சுருட்டி போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஓரிரு தினங்களில் குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இது குறித்த கிராம மக்கள் தெரிவிக்கையில்:- கடந்த 45 நாட்களாக குடிநீர் வரவில்லை, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் மறியல் போராட்டம் நடத்தினோம். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை அன்று தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

அறிவித்தபடி தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்கள் நடத்துவது மட்டுமின்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் போராட்டத்தால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News