280 மனுக்களுக்கு தீர்வு : 100 மனுக்கள் தள்ளுபடி

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் 280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 100 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2024-06-27 12:11 GMT
ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு ஜமாபந்தி அலுவலர் ராமகிருஷ்ணன் பட்டா வழங்கினார்.

- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி முகாம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முகாம் நிறைவு நாளான நேற்று அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

முகாமில் உடையார்பாளையம் தாசில்தார் கலீலூர் ரகுமான், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாக்கியம் விக்டோரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த முகாமில், தா.பழூர் குறுவட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டு, 62 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 194 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது. இதேபோன்று சுத்தமல்லி குறுவட்டத்தில் 212 மனுக்கள் பெறப்பட்டு, 62 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

41 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 109 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது. குண்டவெளி குறுவட்டத்தில் 244 மனுக்கள் பெறப்பட்டு, 39 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 155 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது.

உடையார்பாளையம் குறு வட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டு, 59 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 169 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது. ஜெயங்கொண்டம் குறுவட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டு, 58 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 281 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது. ஆக மொத்தம் 1318 மனுக்கள் பெறப்பட்டு 280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 100 மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

908 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது. முகாமில் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News