மக்கள் நீதி மைய தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மூன்று நிர்வாகிகள் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராக வருகிறது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்து தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. சமீபத்தில், மநீம செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது.
அப்போது, கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல்பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.