பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகார்: பேராசிரியர்கள் உள்பட 5 பேர் ஆஜர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகாரில் பேராசிரியர்கள் உள்பட 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

Update: 2024-01-05 04:29 GMT

ஆஜராக வந்தவர்கள் 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த முறைகேடு வழக்கில் பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு இணையதளம் மூலம் புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராமன், உதவி பேராசிரியர்கள் சுப்பிரமணியபாரதி, ஜெயக்குமார், நரேஷ்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் ஆஜராகினர். பின்னர் அவர்களிடம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் மனோன்மணி ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடந்தது.

Tags:    

Similar News