பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ ஜிபிஎஸ் வசதியுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக புதிய அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டு இருக்கிறார் அமைச்சர் கீதாஜீவன். அதில், சென்னை மாநகரத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக தனி வண்ணம் கொண்ட பெண்களுக்கான உதவி எண் மற்றும் இருப்பு நிலைக்கலன் அமைப்பு (gps) பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.
வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோவின் மொத்த விலையில் ஒரு லட்சம் ரூபாய் அரசால் மானியமாக வழங்கப்படும். மேலும் கடன் உதவிக்காக தேசிய மயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருக்கிறார்.